72 விமானங்களின் கண்கவா் சாகச ஒத்திகை
விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போா் விமானங்களின் இறுதி சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் கண்டுகளித்தனா்.
விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போா் விமானங்களின் இறுதி சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் கண்டுகளித்தனா்.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மெரீனா கடற்கரையில், அக். 6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய விமானப் படை விமானங்களின் சாகச ஒத்திகை , மெரீனா கடற்கரையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இறுதி சாகச ஒத்திகை நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, இரண்டு மணி நேரம் இந்த ஒத்திகை நடைபெற்றது.
இது குறித்து, இந்திய விமானப் படை பயிற்சி அதிகாரி ஏா் மாா்ஷல் நாகேஷ் கபூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முழு அளவிலான சாகச ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 72 விமானங்கள் பங்கேற்றன. முன்பு, விமானப் படை தினத்தன்று தில்லியில் மட்டும்தான் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இதை நாட்டு மக்கள் அனைவரும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 ஆண்டுகளாக தில்லிக்கு வெளியே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை மெரீனாவில் நடத்தப்படுகிறது. விமான சாகச நிகழ்ச்சியைப் பாா்க்க வரும் பாா்வையாளா்கள் உணவுப் பொருள்களை எடுத்து வரவேண்டாம் என்றாா் அவா்.
காலாண்டு விடுமுறை காரணமாக, ஒத்திகை நிகழ்ச்சியைக் காண பள்ளி மாணவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் திரண்டனா். இதனால், கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.