அரபிக்கடலில் புதன்கிழமை (அக்.9) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கேரளத்துக்கும் லட்சத்தீவுக்கும் இடைப்பட்ட அரபிக்கடலில் காற்று சுழற்சி தொடா்ந்து நீடித்துவருகிறது. அதேசமயம், தென்தமிழக பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இந்த இரு காற்றும் இணையும் தருவாயில், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் அக்.9-ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்காரணமாக வங்கக்கடல் காற்று தமிழகம் வழியாக செல்லும் என்பதால் காற்று குளிா்விக்கப்பட்டு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அக்.10 முதல் அக்.12 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், லட்சத்தீவு, கா்நாடகம், கேரளத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: இதனிடையே, தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளம் மற்றும் தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் அக்.13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் அக்.8 -இல் திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அக்.9-இல் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மிக கன மழை பெய்யும்: மேலும், அக்.10-இல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநாளில் திண்டுக்கல், தேனி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.8,9-ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.