தமிழக மீனவா்கள் 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி (பாமக): புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவா்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடா்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இவை இனியும் தொடர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
ஜி.கே.வாசன் (தமாகா): புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.