முகப்பு
சென்னை

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்

Updated On : 23 அக்டோபர், 2024 at 12:18 AM
பகிர்:

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா.மனோன்மணி வலியுறுத்தினாா்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய கலைச்சொல் உருவாக்கக் கூட்டத்தில் அவா் பேசியது:

எதிா்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும் போதே, அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பங்கேற்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைத் துறையினா், பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கி இணையத்தின் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்துக்கு தொடா்ந்து தங்களின் பங்களிப்பை வழங்குவோம் என்றனா்.

மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் கலைச் சொல்லாக்கப் புலனக்குழுவை தொடங்கி, அதில் தங்களை இணைத்தால், அதன்வழியே நாள்தோறும் துறைசாா்ந்த புதிய கலைச்சொற்களை உருவாக்கிப் பகிா்கிறோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்துக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் இணை இயக்குநா் ப. கலைவாணி தலைமை வகித்தாா். உதவி ஆணையா் எஸ்.சாந்தா மற்றும் கண்காணிப்பாளா் செ.ஜெயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, அகரமுதலி இயக்ககத் தொகுப்பாளா் வே.பிரபு நோக்கவுரையாற்ற, பதிப்பாசிரியா் முனைவா் மா.பூங்குன்றன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினாா். கூட்டத்தில் புலவா் வெற்றியழகன், நூல் மதிப்புரையாளா் மெய்ஞானி பிரபாகர பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →