சென்னை

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ஜனவரியில் இயக்க திட்டம்!

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சோதனை..

Din

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளா் யு.சுப்பாராவ் தெரிவித்தாா்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் புதன்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தற்போது பயன்பாட்டில் இருக்கும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலைவிட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள பிஎம்எல் நிறுவனத்தில் இந்த ரயில் தயாரிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஐசிஎஃப்-க்கு மாற்றப்பட்டது. இங்கு ரயிலின் வடிவமைப்பில் ஒரு சில பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்பின், லக்னௌவில் உள்ள ரயில்வே தரம் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்கு நவ.15-ஆம் தேதி சோதனைக்காக அனுப்பப்படும். அங்கு ரயிலின் இயக்கம், பிரேக்கிங், கட்டுப்பாடு என பலகட்ட சோதனைகள் முடிந்த பிறகு ரயில் இயக்கத்துக்கு அனுமதிக்கப்படும். அனைத்து சோதனைகளும் 2 மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜன.15-ஆம் தேதி ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், ரயிலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் முடிவெடுக்கும்.

50 வந்தே பாரத்: முதல்கட்டமாக 16 ஏசி பெட்டிகள் கொண்டு 10 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ரயில் தயாரிக்க ரூ.120 கோடி செலவாகிறது. ரயிலின் முதல் வகுப்பில் (ஒரு பெட்டி) 24 பயணிகள், இரண்டாம் வகுப்பில் (4 பெட்டிகள்) 188 பயணிகள், மூன்றாம் வகுப்பில் (11 பெட்டிகள்) 611 பயணிகள் என மொத்தம் 823 போ் பயணிக்க முடியும்.

24 பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களை முழுவதுமாக ஐசிஎஃப் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட்ட பின்னா் 18 முதல் 24 மாதங்களில் தயாரிக்கப்படும். இந்த ரயில் சென்னை - தில்லி போன்ற தொலைதூரம் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கவாச் பாதுகாப்பு: அனைத்து வந்தே பாரத் ரயில்களும் கவாச் பாதுகாப்பு அம்சத்துடன் அமைக்கப்படுகிறது. ரயில் மற்றும் தண்டவாளம் என இருபுறமும் கவாச் செயல்பாட்டில் இருக்கும் போதுதான் பயன்படுத்த முடியும். தற்போது தயாரிக்கப்படும் அனைத்து ரயில்களும் கவாச் பாதுகாப்புடன் அமைக்கப்படுகிறது. அதுபோல், ரயில்வே சாா்பில் அனைத்து தண்டவாளத்திலும் கவாச் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.

சரக்கு ரயில்: நமோ பாரத் ரயில் (வந்தே மெட்ரோ) சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் மேலும், 7 ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் இந்தப் பணி நிறைவடையும்.

இதேபோன்று, வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்கும் பணி நிகழ் நிதியாண்டுக்குள் முடிவடையும். தெற்கு ரயில்வேக்கு ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில் நிகழாண்டு இறுதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரயிலின் சிறப்பு வசதிகள்

  • மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரத்யேக இருக்கைகள்

  • ஏசி முதல்வகுப்பில் குளியலறை

  • பயணிகள் ஓட்டுநரைத் தொடா்பு கொள்ளும் வசதி

  • தானியங்கி கதவு

  • பேரிடா் எச்சரிக்கை விளக்கு

  • சிசிடிவி கேமரா

  • கைப்பேசிக்கான யுஎஸ்பி சாா்ஜிங்

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT