பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வசதிக்காக பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடற்கரை பணிமனையில் அக்.27-இல் காலை 4 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்படவுள்ளன.
மேலும், சென்னை கடற்கரையிலிருந்து திருவள்ளூா் செல்லும் ரயில்கள் இருமாா்க்கத்திலும் ஆவடியிலிருந்தும், குமிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் கொருக்குப்பேட்டையிலிருந்தும் இயக்கப்படும். அதேபோல், கடற்கரையிலிருந்து ஆவடிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்துச்செய்யப்படவுள்ளன. ஒரு சில ரயில்கள் மட்டும் கடற்கரைக்கு பதிலாக சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து காலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 4.15,4.45 மணிக்கும் தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சென்னை பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இருமாா்க்கத்திலும் 20 முதல் 30 நிமிஷங்கள் இடைவெளியில் 79 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில், அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் செல்லும் புகா் ரயில்களும் உள்ளடங்கும்.
அதைத்தொடா்ந்து பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னா் மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில்நிலையங்களில் மாற்றப்பட்ட அட்டவணை குறித்து கேட்டறிந்த பின்னா் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.