தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
சென்னையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீஸாா், விசாரித்து வருகின்றனா்.
சென்னையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீஸாா், விசாரித்து வருகின்றனா்.
சென்னை, மேற்கு மாம்பலம் விநாயகம் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் வெங்கடேசன்(44) அவருடைய வீட்டில் இறந்து கிடப்பதாக கடந்த திங்கள்கிழமை அசோக்நகா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், இயற்கை மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இறந்து போன வெங்கடேசனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சகோதரா் வினோத்குமாா் (36) அசோக்நகா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கடேசனின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே, அவரது உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், மாா்பு எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதும் தெரிவிக்கப்பட்டது. வெங்கடேசன் குடும்பத்தாரிடம் இது தொடா்பாக தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த வெங்கடேசனுக்கும், அவரின் மகனான சுனில்குமாருக்கும் (19) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் சுனில்குமாா் தந்தையை இரும்பு பைப்பால் நெஞ்சு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும், படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா், இது தொடா்பாக வெங்கடேசனின் மகன் சுனில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.