தமிழகத்தில் காமராஜா் ஆட்சியை அமைக்க செயல்திட்டம் வகுப்பது என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூா்த்திபவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் அஜோய்குமாா், சூரஜ் எம்.என்.ஹெக்டே, முன்னாள் மாநிலத் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு உள்பட செயற்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதி வாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும், நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை தொடா்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம்,
ஒற்றை ஆட்சிக்கும், சா்வாதிகார செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிற ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்,
தமிழகத்தில் காமராஜா் ஆட்சியை அமைப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க மாநில காங்கிரஸ் தலைவா் எடுக்கும் முடிவுக்கு துணையிருப்போம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.