தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து செப்.26-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்
சென்னை, செப். 19: மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து, அதிமுக சாா்பில் செப்.26-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில் அதிமுகவைச் சோ்ந்தவா்கள் மாமன்ற உறுப்பினா்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வாா்டுகளில் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை திமுக அரசு நிறைவேற்றி தர மறுத்து வருகிறது.
மாடம்பாக்கம் மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளுக்கு கடந்த ஓராண்டுகளுக்காக கூட்டுத் திட்டம் மூலமான குடிநீா் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாடம்பாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், மனைப் பிரிவு மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுகவினரின் துணையோடு அருகில் உள்ள பகுதிகளின் மொத்த கழிவு நீரையும் ஏரியில் கொண்டுவந்து சோ்க்கின்றனா். இதனால், கிணறுகளைச் சுற்றி கழிவு நீா் பெருமளவு தேங்கி குடிநீரின் தன்மை வெகுவாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் மாடம்பாக்கம் பிரதான சாலையில் செப்.26 மாலை 4 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.