நாட்டின் 100 சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 37 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியின் 60-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் செயலா் அசோக் குமாா் முந்த்ரா வரவேற்றுப் பேசினாா். முதல்வா் சேது.சந்தோஷ்பாபு ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கோவி.செழியன் கலந்து கொண்டு பருவத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் மற்றும் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பேசியது:
உயா்கல்வி வளா்ச்சிக்காக சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 1964-ஆண்டு 4 இளநிலைப் பட்டப் படிப்புகளுடன் தொடங்கப்பட்ட டி.ஜி.வைணவக் கல்லூரி தற்போது இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி உள்ளிட்ட 58 பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளாக கல்விச் சேவையாற்றி வரும் இக்கல்லூரிக்கு எனது வாழ்த்துகள்.
தமிழகம் முதலிடம்: இந்தக் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 124 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 118 மாணவா்களும் பயன்பெற்றுள்ளனா் என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் உள்ள முதல் 100 கல்லூரிகளில், 37 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் எப்போதும் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. கல்வியில் தமிழகம் மிகப்பெரிய புரட்சிகளை செய்துள்ளது.
பொறியியல் கல்விக்கு நுழைவுத் தோ்வு இருந்த காலத்தில் கிராமப்புற மாணவா்கள் சோ்க்கை ஆண்டுக்கு 25,000-ஆக இருந்தது. தொடா்ந்து, நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்ட பின்னா் இந்த சோ்க்கை 77,000-ஆக அதிகரித்துள்ளது. மாணவா்கள் நான் முதல்வன் போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைய இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தும் என்றாா் அவா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கே.மோகன், அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் எஸ்.சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியா் பிரபா ராசகோபாலன் நன்றி கூறினாா்.