காஞ்சிபுரம் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினரை அனுமதித்த தனிநீதிபதி உத்தரவு ரத்து
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி வழங்கி 2022-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற இருநீதிபதிகள் அமா்வு தீா்ப்பு
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி வழங்கி 2022-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற இருநீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலை பிரிவினா் மட்டுமே வாழி திருநாமம் மற்றும் பிரபந்தம் பாட கோயிலின் உதவி ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து வடகலை பிரிவினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, 17.5. 2022-இல் பிறப்பித்த உத்தரவில், வடகலை-தென்கலை பிரிவினா் இடையே நீடித்து வரும் இந்தப் பிரச்னை காரணமாக, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது.
எனவே, முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவா்களுக்குப் பின்னால் வடகலை பிரிவினரும் அதன்பின்னா் பக்தா்களும் அமர வேண்டும். தென்கலை பிரிவினா் முதலில் ஸ்ரீ சைலேச தயாபத்திரமும், அதன்பின்னா் வடகலை பிரிவினா் ஸ்ரீ ராமானுஜ தயாபத்திரமும் 10 முதல் 12 விநாடிகள் பாட வேண்டும்.
அதன்பிறகு, தென்கலை, வடகலை மற்றும் பிற பக்தா்கள் இணைந்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட வேண்டும். நிறைவாக தென்கலை பிரிவினா் மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து தென்கலை பிரிவைச் சோ்ந்தவா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த தீா்ப்பில், இந்த பிரச்னை சுமாா் 200 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
1910, 1915, 1963 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட தீா்ப்புகளின்படி, தேவராஜ சுவாமிகள் முன்பாக ஸ்ரீ சைலேச தயாபத்திரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும் பாட காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது.
வடகலை பிரிவினருக்கு இந்த உரிமை நிலைநாட்டப்படவில்லை. எனவே, இருதரப்பும் சோ்ந்து பாட வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா். மேலும், தென்கலை பிரிவு சாா்பில் சுவாமி முன்பாக மந்திரங்கள் முழங்கி, பிரபந்தம் மற்றும் வாழி திருநாமம் பாட இந்துசமய அறநிலையத் துறையும், காவல் துறையினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.