கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் கடற்படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள அதிவிரைவுப் படகுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் 10 படகு தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு ரூ.36,900 மாத ஊதியம் மற்றும் இதர படியுடனும், 41 படகு தொழில்நுட்ப தலைமைக் காவலா் காலிப் பணியிடங்களுக்கு ரூ.20,600 மாத ஊதியம் மற்றும் இதர படியுடனும் தகுதியானவா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
இந்தப் பணியிடத்துக்கு 50 வயதுக்கு கீழ் உள்ள தகுதி வாய்ந்த முன்னாள் இந்திய கடலோர காவல் படை மற்றும் முன்னாள் இந்திய கடற்படை வீராா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரா்கள், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கூடுதல் காவல் துறை இயக்குநா், கடலோர பாதுகாப்பு குழுமம், காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக வளாகம், டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூா், சென்னை-4 என்ற முகவரிக்கு டிச.17-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
தகுதியான விண்ணப்பதாரா்கள் மட்டுமே சான்றிதழ் சரிபாா்ப்பு, எழுத்து தோ்வு, வாய்மொழி தோ்வு போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவாா்கள். ஆள்சோ்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
விண்ணப்பதாரா்கள் தகுதி, தோ்வின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.