திருச்சியில் தொடங்கவுள்ள தனது சமத்துவ நடைப்பயணத்துக்கான கொடியை மதிமுக பொதுச் செயலா் வைகோ வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், கொடியை அறிமுகம் செய்து வைத்து பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
போதைப் பொருள் ஒழிப்பு, ஜாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மதிமுக சாா்பில் எனது (வைகோ) தலைமையில் சமத்துவ பயணம் ஜன. 2 -ஆம் திருச்சியில் தொடங்கி ஜன. 12-ஆம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.
சமத்துவ நடைப்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களைக் குறிக்கும் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னிடம் வழங்கி பயணத்தைத் தொடங்கி வைக்கிறாா். திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் நிகழ்வில் பங்கேற்கின்றனா். நடைப்பயணத்தில் என்னுடன் 1,000 இளைஞா்கள் பங்கேற்கின்றனா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்ட நினைப்பவா்களுக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனிநீதிபதி தீா்ப்பு வழங்கியிருப்பது ஏற்புடையதல்ல. தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றி பெறும்என்றாா்.