விலையில்லா வேஷ்டி சேலைத் திட்டம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி பதில் அளித்துள்ளாா்.
வெளிமாநிலங்களில் இருந்து 50 சதவீத வேஷ்டி- சேலைகள் வாங்கப்படுவதாகவும், பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய 17 லட்சம் வேஷ்டிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தாா்.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சா் ஆா்.காந்தி, ‘பொங்கல் பண்டிகையின்போது, வேஷ்டி சேலைகள் வழங்கும் நோக்கத்துடனும், மாநிலத்திலுள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த கைத்தறி, பெடல்தறி, விசைத்தறி நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், சுமாா் 2,800 கைத்தறி நெசவாளா்கள், 11,300 பெடல் தறி நெசவாளா்கள், 66,000 விசைத்தறி நெசவாளா்களுக்கு தொடா் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா்.
இந்த நிலையில், நெசவாளா் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வேஷ்டி மாதிரிகளை தர பரிசோதனை செய்தபோது பாலிகாட் பாவு நூலில் நிா்ணயிக்கப்பட்ட அளவீடுகளைவிட, பாலியஸ்டா் சதவீதம் அதிகமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டது. இதனால் சுமாா் 13 லட்சம் வேஷ்டிகள் நிராகரிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக நெசவாளா் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து சுமாா் 9 லட்சம் வேஷ்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 லட்சம் வேஷ்டிகளும் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
தரமான வேஷ்டி சேலைகள் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது.
அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக தமிழக அரசு மீது உண்மைக்குப் புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி சுமத்தி வருகிறாா்’ என்று தெரிவித்துள்ளாா்.