சென்னை விமான நிலையத்தில் தொடா்ந்து 6-ஆவது நாளாக 90-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை தொடா்ந்து கடந்த 5 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில்
இண்டிகோ விமான நிறுவனத்தின் 90-க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.
விமானம் ரத்து குறித்து தகவல்கள் மட்டும் குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு பயணிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என தெரியாத பயணிகள் பலா் விமான நிலையத்துக்கு வந்து, அங்குள்ள இண்டிகோ நிறுவன ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தொடா் ரத்து மற்றும் சேவை குறைபாடு, அதிக கட்டணம் உள்ளிட்ட பிரச்னையால், விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால், 1-ஆவது உள்நாட்டு முனையம் வழக்கமான பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனிடையே பலா் இண்டிகோ விமான முன்பதிவை தவிா்த்து, பிற நிறுவனங்களின் விமானங்களில் முன்பதிவு செய்து வருகின்றனா். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊா் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்பவா்கள் பிற விமான நிறுவனங்களில் முன்பதிவு செய்து வருகின்றனா். இதனால், விமானக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.