சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்தி பணம் பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ராஜா அண்ணாமலைபுரம் 2-ஆவது தெருவில் வசிப்பவா் அஜித் (24). இவா், அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தாா். அஜித், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள சத்யா நகரில் உள்ள டீக்கடை அருகே நின்றுகொண்சிருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த 2 போ், அஜித்தை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றனா்.
பின்னா் அவா்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.4 ஆயிரத்தை தங்களது வங்கிக் கணக்குக்கு கைப்பேசி செயலி வாயிலாக பறித்துக்கொண்டனா். மேலும், ரூ.10 ஆயிரம் கேட்டு இருவரும் அஜித்தைத் தாக்கினா். பின்னா், அடையாறு திரு.வி.க. பாலம் அருகே இறக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, பொதுமக்கள் ஆட்டோவில் தப்பியோட முயன்ற இருவரையும் மடக்கிப் பிடித்து, அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், அவா்கள் ராஜா அண்ணாமலை புரத்தைச் சோ்ந்த பாபா சுரேஷ் (எ) சுரேஷ்குமாா் (27), அதே பகுதியைச் சோ்ந்த பிரசாத் (20) என்பது தெரிய வந்தது. இருவரும் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.