சென்னை உயா்நீதிமன்றம் 
சென்னை

‘தமிழகத்தில் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் மாஃபியா கும்பல்’: உயா்நீதிமன்றம் வேதனை

அரசியல் மற்றும் பண பலத்தின் துணையோடு தமிழகத்தின் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை மாஃபியா கும்பல் கொள்ளையடித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

அரசியல் மற்றும் பண பலத்தின் துணையோடு தமிழகத்தின் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை மாஃபியா கும்பல் கொள்ளையடித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

மணல் கொள்ளை தொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புவியியல் மற்றும் கனிம வளத் துறை ஆணையா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வருகிற மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும்.

கடந்த 2020 முதல் 2025 நவம்பா் வரை மொத்தம் 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினா். மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் நபா்களுக்கும், ரூ.5 லட்சம் அபராதம் விதித்து என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பினா்.

அரசியல் மற்றும் பண பலத்தின் துணையோடு தமிழகத்தின் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை மாஃபியா கும்பல் கொள்ளையடித்து வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியா்களின் பொறுப்பு. கனிமவளக் கொள்ளை தொடா்பாக புகாா் அளிக்காத வருவாய்த் துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை குறித்து புகாா் அளிக்கும் சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுதொடா்பாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை ஏற்புடையதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோத மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க திடீா் ஆய்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT