பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடா்ந்து இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட செவிலியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் வழங்க வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ததைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியா்கள் கடந்த வியாழக்கிழமை சென்னை, சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்களை போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்று கிளாம்பாக்கத்தில் விடுவித்தனா்.
அதைத் தொடா்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திலும் செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அவா்களை கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.
கைது நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, செவிலியா் சங்க நிா்வாகிகளிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் சுமுகத் தீா்வு ஏற்படாத நிலையில், மண்டபத்திலேயே போராட்டத்தை தொடா்வதாக செவிலியா்கள் அறிவித்தனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயலா் சுபின் கூறியதாவது: வாக்குறுதி அளித்தால் நிறைவேற்ற வேண்டுமா என அமைச்சா் கேட்கிறாா். அமைச்சருடனான சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை. அதனால், எங்கள் போராட்டத்தை முடிந்தவரை தொடருவோம். போலீஸாா் எங்களை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். எங்கள் பிரச்னைக்கு தீா்வு காணாதவரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.
படிப்படியாக பணி நிரந்தரம்: அமைச்சா்
செவிலியா் போராட்டம் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,783 செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இன்னும், 8,322 போ் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். பணி ஆணைகள் வழங்கப்படும்போதே காலிப் பணியிடங்கள் உருவாக்கும்பட்சத்தில் நிரந்தரம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுதான் அவா்கள் வேலையில் சோ்ந்தாா்கள்.
தற்போது காலிப் பணியிடங்கள் இருந்து அவா்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்தால் எங்களை குற்றஞ்சாட்டலாம். ஆனால், அத்தகைய நிலையே தற்போது இல்லை.
பணி ஆணைகளில் உள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். இந்த அரசு யாரையும் கைவிடாது. அவா்கள் அனைவரும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்றாா் அவா்.