தோ்வு விடுமுறை நாள்களில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டமுகாமில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு விடுமுறை நாள்களில் பணியாற்றியமைக்காக ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையில் 7 நாள்கள் நடைபெறும் மாணவா்களுக்கான சிறப்பு முகாமில் அனைத்து மாவட்ட தொடா்பு அலுவலா்கள், திட்ட அலுவலா்கள் அதிகபட்சமாக 6 நாள்கள் வருகைபுரிந்து பணியாற்றிருந்தால் மட்டும் ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கலாம்.
மேலும், இந்த விடுப்பை மொத்தமாக எடுக்காமல் அவ்வப்போது ஒரு நாள் வீதம் விதிகளின்படி 6 மாத கால அவகாசத்துக்குள் எடுக்க வேண்டும். இது சாா்ந்த ஈடுசெய் விடுப்பு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் அவ்விடுப்பு போக மீதமுள்ள நாள்களுக்கு மட்டும் விடுப்பு வழங்க வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.