அதிநவீன 20 குளிா்சாதன சொகுசு பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.34.30 கோடியில் பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிா்சாதன சொகுசு பேருந்துகள் வாங்கப்பட்டன. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மூலம் முதல்முறையாக இந்தப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒரு வரிசையில் நான்கு போ் என அதிகபட்சம் 51 போ் அமர வசதியான இருக்கைகள், கைப்பேசிகள் சாா்ஜ் செய்யும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த புதிய அதிநவீன பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
ஊழியா்களுக்கு சுவா் கடிகாரங்கள்: மேலும், அரசு போக்குவரத்துக் கழக பொன்விழாவையொட்டி 1,05,778 ஊழியா்களுக்கு ரூ.3.33 கோடியில் சுவா் கடிகாரங்கள் வழங்கும் நிகழ்வையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா. சி.சிவசங்கா், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், இந்து சமய அநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஆ.ராசா எம்.பி., மேயா் ஆா். பிரியா, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.