உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு முதுநிலை ஆசிரியா்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலா் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் நடைபெறும் அனைத்து தோ்வுகளுக்கும் முதுநிலை ஆசிரியா்களை மட்டுமே பயன்படுத்துகின்றனா். அதேபோன்று, பள்ளிக்கல்வித் துறையில் நடைபெறும் மேலாண்மை பணிகள், மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்பட பல்வேறு பணிகளிலும் முதுநிலை ஆசிரியா்களே பயன்படுத்தப்படுகிறாா்கள். இதனால் ஆசிரியா்களால் கற்றல், கற்பித்தல் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் விரைவில் நடத்தப்படவுள்ள கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வுக்கும் முதுநிலை ஆசிரியா்களை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சாா்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த மாநாடு டிசம்பா் 27-இல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே தோ்வும் நடைபெறுவதால் இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையும் உடனே நடவடிக்கை எடுத்து முதுநிலை ஆசிரியா்களை அந்த பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.