முகப்பு
தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: பிப்ரவரி 7, 9-இல் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பிப்.7, 9 ஆகிய நாள்களில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 7:35 PM
- DIN
பகிர்:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பிப்.7, 9 ஆகிய நாள்களில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் 2023-2024, 2024-2025 ஆகிய ஆண்டுகளுக்கான முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்காக தோ்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பட்டியல் கடந்த ஜன.22-இல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அவா்களுக்கு ‘எமிஸ்’ தளம் மூலமாக பிப்.7, 9 ஆகிய நாள்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் கலந்தாய்வு நாள் தெரிவிக்கப்பட்டவுடன் அதில் பங்கேற்கவுள்ள பணி நாடுநா்களுக்கு உடனடியாக தகவல் அளிக்கத் தேவையான ஆயத்தப் பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட யூஸா் ஐடி, பாஸ்வோ்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்துப் பாடங்களுக்கும் எமிஸ் தளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்.

பாடவாரியான பணிநாடுநா்கள் எண்ணிக்கை ஏற்றவாறு கணினி, இணையதள வசதி செய்து கொள்ள வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் நாளில் டிஆா்பி மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களின் கல்விச் சான்றிதழ்களைச் சரிபாா்க்க வேண்டும். அவா்கள் விரும்பும் காலிப் பணியிடத்தை தோ்வு செய்தவுடன் அதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பணி நியமன ஆணையை கலந்தாய்வு நடைபெறும் நாளில் வழங்கக் கூடாது. பணி நியமன ஆணையை சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.