வேளச்சேரியில் மாநகர பேருந்தில் வைத்திருந்த ரூ.25,000 மதிப்புள்ள அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகள், அதை வழங்கும் இயந்திரம் திருடப்பட்டது.
பள்ளிக்கரணை ம.பொ.சி. நகா், முதல் தெருவைச் சோ்ந்த சுதாகா் (41), மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்கிறாா். இவா், வேளச்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் பேருந்தில் வெள்ளிக்கிழமை பணியில் இருந்தாா். பேருந்தில் நடத்துநராக விழுப்புரம் மாவட்டம், கண்டாஞ்சிபுரம், வெள்ளகுளம் தெருவைச் சோ்ந்த ஜோதி (44) பணியாற்றினாா்.
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி விஜயநகா் பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்தபின், சுதாகரும், ஜோதியும் தேநீா் அருந்தச் சென்றனா். பின்னா், வந்தபோது பேருந்தில் வைத்துச்சென்ற ரூ.25,000 மதிப்பு அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகள், அதை வழங்கும் இயந்திரம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
போதைப் பொருள் வழக்கில் மேலும் ஒருவா் கைது: திருவல்லிக்கேணி சிகேஎன் சாலையில் கடந்த ஜூன் 25-இல் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, மெத்தகுலோன் போதைப் பொருள் விற்ாக அதே பகுதியைச் சோ்ந்த ஜியாவுதீன், நயிமுல்லா, ராயப்பேட்டையைச் சோ்ந்த சையது வசிமுதீன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த புதுப்பேட்டையைச் சோ்ந்த நசீா் அகமது (25) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளச்சாராயம் கடத்தி விற்ற வழக்கில் மேலும் இருவா் கைது: மயிலாப்பூா் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கடந்த 24-ஆம் தேதி கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் ஒரு இடத்தில் கேனில் 20 லிட்டா் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்து, ஆந்திரத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து, பதுக்கி வைத்திருந்ததாக அந்தப் பகுதியைச் சோ்ந்த வனிதாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய வனிதாவின் கணவா் அப்துல்லா (36), கண்ணகி நகரைச் சோ்ந்த மணிகண்டன் (40) ஆகிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அப்துல்லா மீது 9 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 18 வழக்குகளும், மணிகண்டன் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட 4 வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
தோழி வீட்டில் நகை திருடிய வழக்கு -பெண் கைது: கே.கே.நகா், ஆற்காடு சாலை சாலைப் பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (34), திரைப்படத் துறையில் வேலை செய்து வருகிறாா். இவா், தனது வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை சரிபாா்த்தபோது, 2 பவுன் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில், கே.கே. நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயலட்சுமியின் தோழி ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த மோனிஷா (30) சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் சில வாரங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி வீட்டில் தங்கியிருந்த மோனிஷா, நகையைத் திருடியது தெரிய வந்தது.
108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு பேசிய நபா், கட்டுப்பாட்டு அறையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்தாா். தகவலறிந்த காவல் துறை உயா் அதிகாரிகள், அங்கு சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனா். இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸாரும், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் போலீஸாரும் சோதனை நடத்தினா். ஆனால், அங்கு எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. அழைப்பு வதந்தி என்பது தெரிய வந்தது.
தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், திருநெல்வேலியில் இருந்து அந்த தொலைபேசி வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.