சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து சிறுவனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாலிவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நிர்மலா தம்பதிக்கு ரோகித் என்ற 4 வயது மகன் இருந்தார். அவருக்கு கடந்த 2 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அயனாவரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை சிறுவன் ரோகித்தை உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். இதற்காக பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஒருவர் விடியோ அழைப்பு மூலம் சிறுவனுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
சிகிச்சையின்போது திடீரென சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததை தொடர்ந்து, அயனாவரம் காவல்துறையினருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் கலைந்து செல்லுமாறு போலீசார் மிரட்டும் தோரணையில் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சில மணிநேரம் வாக்குவாதத்துக்கு பிறகு, நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சமரசம் எட்டப்படவில்லை என்றால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, சிறுவனின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அயனாவரம் பகுதியில் நேற்றிரவு பரபரப்பான சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.