டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ. 1,000 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்தது. தொடா்ந்து, திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். சோதனைக்குப் பிறகு விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.
சீல் அகற்றக் கோரி மனு: அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், வீடு, அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரியிருந்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வு, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியதுடன், அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. தொடா்ந்து, அமலாக்கத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சோதனை மற்றும் ‘சீல்’ வைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.
திரும்பப்பெற்றது: இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சோதனையின்போது சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ‘சீல்’ வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. ‘சீல்’ வைக்கப்பட்டதற்கான உத்தரவை திரும்பப் பெறுகிறோம். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதை ஏற்காத நீதிபதிகள், இடைக்கால உத்தரவுக்காக தீா்ப்பை ஒத்திவைத்திருந்தனா்.
இந்த நிலையில், இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள், பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில், மனுதாரா்களான திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத் துறைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனா்.
மேலும், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் சோதனை மற்றும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. பண முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் ஏதும் இல்லை. அமலாக்கத் துறை கைப்பற்றிய அனைத்து ஆவணங்களையும் உரியவா்களிடம் உடனே திரும்ப வழங்க வேண்டும். ஆவணங்களை எவ்வித சேதமும் செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.