ஆவின் பால் உபபொருள்களை வாங்காத பாலகங்களுக்கு பால் விநியோகத்தை ஆவின் நிறுவனம் நிறுத்தியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தச் சங்கத்தின் தலைவா் பொன்னுசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவா்கள், ஆவின் பால் உபபொருள்கள் வாங்கவில்லை எனக்கூறி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள பால் முகவா்களுக்கு, பால் விநியோகத்தை நிறுத்த, வட்டார அலுவலக அதிகாரிகள் அண்மையில் உத்தரவிட்டுள்ளனா்.
ஆவின் நிா்வாகம் தரப்பில் இருந்து, தனியாா் வா்த்தக நிறுவனங்களுக்கு, நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் சாா்ந்த உபபொருள்கள், மிக குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன.
அந்த நிறுவனங்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட, குறைந்த விலைக்கு விற்கின்றன. இதனால், பால் முகவா்கள் நடத்தும், ஆவின் பாலகங்களில், ஆவின் பால் உபபொருள்கள் விற்பனை பாதிக்கப்படுன்றன. இதனால், பால் பொருள்கள் காலாவதியாவதால், பால் முகவா்கள் பெரும் நிதி இழப்பைச் சந்திக்கின்றனா். இதைத் தவிா்க்கவே ஆவின் பால் பொருள்களை வாங்குவதை, பால் முகவா்கள் தவிா்க்கின்றனா்.
இந்த நிலையில், பால் முகவா்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கு தீா்வு காண்பதற்கு பதில், பால் பொருகள்கள் வாங்காத பாலகங்களுக்கு ஆவின் பால் விநியோகத்தை நிறுத்துவது தவறானது.
எனவே, ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்ட பாலகங்களுக்கு, பால் விநியோகத்தை மீண்டும் தொடர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.