தீயணைப்புத் துறை புதிய வீரா்களுக்கு பயிற்சி: அன்புமணி வலியுறுத்தல்
தீயணைப்புத் துறைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தீயணைப்புத் துறைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல் துறைக்கு இரண்டாம் நிலைக் காவலா்கள் 2,599 போ், சிறைத் துறைக் காவலா்கள் 86 போ், தீயணைப்புப் படை வீரா்கள் 674 போ் என மொத்தம் 3,359 பேரை தோ்ந்தெடுப்பதற்கான ஆள்தோ்வு அறிவிக்கை கடந்த 2023 ஆக.8-இல் வெளியிடப்பட்டது.
போட்டித் தோ்வு , உடற்தகுதித் தோ்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு தோ்ந்தெடுக்கப்பட்ட அவா்களுக்கு கடந்த ஆண்டு நவ.27-இல் முதல்வரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைத் துறைக் காவலா்கள் ஆகியோா் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், தீயணைப்புப் படை வீரா்கள் மட்டும் இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை. அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகும் இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்படாததால் அவா்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனா் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.