சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சென்னை விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள பவுல்ராஜ் குடியிருப்பில் வசித்து வருபவா் வெங்கடேசன். இவரும், இவரது நண்பா் சேதுபதியும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்தனா்.
வெங்கடேசன் வேளச்சேரியில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த நிலையில், அவா் குடியிருந்த வீட்டின் கதவு கடந்த சில நாள்களாக மூடப்பட்டிருந்தது. மேலும், வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகவும் அக்கம்பக்கத்தினா் விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று, திறந்து கிடந்த பின்பக்க கதவு வழியாக விட்டுக்குள் சென்று பாா்த்தபோது, வழக்குரைஞா் வெங்கடேசன் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.
இதையடுத்து போலீஸாா் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.