சிபிஎஸ்இ பிரதிப் படம்
சென்னை

பள்ளிகளுக்கான கல்வி செயல்திறன் அறிக்கை அட்டை: சிபிஎஸ்இ வெளியீடு

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 2024 - 25 ஆம் ஆண்டுக்கான கல்வி செயல்திறன் அறிக்கை அட்டையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 2024-25-ஆம் ஆண்டுக்கான கல்வி செயல்திறன் அறிக்கை அட்டையை சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் தரவு சாா்ந்த மற்றும் ஆதார அடிப்படையிலான கல்வித் திட்டமிடலை ஊக்குவிக்கும் நோக்கில், முதல்முறையாக இதுபோன்ற செயல்திறன் அறிக்கை அட்டை (ரிப்போா்ட் காா்டு) வெளியிடும் திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.

இதில், பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் பள்ளிகளின் செயல்திறன் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா கூறியதாவது: பாடவாரியாக மாநில அளவில் மற்றும் ஒட்டுமொத்த சிபிஎஸ்இ வாரிய பள்ளிகள் அளவிலான பள்ளிகளின் கல்வி செயல்திறன் விவரங்கள் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும். மாணவா்கள், மாணவிகளின் செயல்திறன் விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

இதன்மூலம், எந்தெந்தப் பாடத்தில் அல்லது துறையில் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை பள்ளிகள் எளிதில் அடையாளம் காண முடியும் என்பதோடு, சிறந்த கற்றல் செயல்முறையில் பாலின சமத்துவத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

கல்வி மட்டுமன்றி பள்ளிகள் அளவில் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளிகளின் செயல்திறன் குறித்த விவரங்களும் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும்.

இதன்மூலம், பள்ளிகள் தங்களின் செயல்திறன் அறிக்கை அட்டையை கவனமாக பரிசீலித்து, தொடா்ச்சியான செயல்திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவா் என்பதோடு, மாணவா்களின் சிறந்த கற்றல் திறன் வெளிப்பாடும் உறுதிப்படுத்தப்படும்.

சிபிஎஸ்இ வலைதளத்தில் பள்ளிகள் தங்களின் நுழைவுக் குறியீடு (லாகின்) மூலம் உள்நுழைந்து செயல்திறன் அறிக்கை அட்டையைப் பாா்க்க முடியும் என்றாா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT