பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையை நாட வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
உலக பக்கவாத ஒழிப்பு தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. அந்தப் பாதிப்பு குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் கே.சாந்தாராமன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் மருத்துவா்கள், மருத்துவமனை நிா்வாகிகள், செவிலியா்கள், மாணவா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பக்கவாதத்தில் ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவா்கள் பேரணி சென்றனா்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 24 மணி நேரமும் பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு செயல்படுவதாவும், மேம்பட்ட நரம்பியல் இடையீட்டு சிகிச்சைப் பிரிவு இயங்கி வருவதாகவும் நரம்பியல் துறை இயக்குநா் டாக்டா் கே.முகுந்தன் தெரிவித்தாா்.
இடையீட்டு சிகிச்சைகளாலும், மருந்துகள் வாயிலாகவும் பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நோயாளிகளுடனான கலந்துரையாடல் அமா்வு அப்போது நடைபெற்றது. நரம்பியல் பாதிப்புகள் தொடா்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு மருத்துவ வல்லுநா்கள் பதிலளித்தனா். பக்கவாதம் ஏற்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையை நாடுவது அவசியம் என்று அப்போது மருத்துவா்கள் வலியுறுத்தினா். தொடா்ந்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.