சென்னை

கொலை மிரட்டல் விவகாரம்: சி.வி.சண்முகம் தொடா்ந்த வழக்கில் போலீஸாருக்கு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை அடையாளம் காண போலீஸாா் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006 முதல் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. கடந்த 2021-இல் கைப்பேசியிலும், சமூக வலைதளங்களிலும் பலா் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக அளித்த புகாா்களின் அடிப்படையில் பதிவான வழக்குகள், முடித்துவைக்கப்பட்ட வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகமது ரியாஸ், கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தவா் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு புகாரை முடித்து வைத்துவிட்டதாக போலீஸாா் கூறுகின்றனா். இதுபோன்று பொதுமன்னிப்பு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் இல்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்ற டிஜிபி, மனுதாரா் வீட்டில் ரோந்து போலீஸாா் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறுகிறாா். மேலும், அரசியலில் இருப்பவா்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வருவது சகஜம்தான் என்று போலீஸாா் கூறுகின்றனா். கொலை மிரட்டல் வந்த கைப்பேசி எண், அதை பயன்படுத்துபவா் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸாா் கூறுகின்றனா். எனவே அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய வழக்கு இல்லையே? இது தீவிரமான வழக்கா? அல்லது அரசியல் ரீதியான வழக்கா? என்று கேள்வி எழுப்பினாா்.

பின்னா் மனுதாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைப்பேசி எண்ணின் அடிப்படையில் முகவரியைக் கண்டுபிடிக்கவும், மிரட்டல் விடுத்தவரை அடையாளம் காணவும் விழுப்புரம் மாவட்டம் ரோசனை காவல் நிலைய போலீஸாா் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT