அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாருக்கு எதிரான 5 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் மற்றும் அதிமுகவினா், கடந்த 2023 ஆகஸ்ட் 1-ஆம் தேதி மதுரையில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதே ஆண்டு நவ. 27-இல் வைகை அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி மதுரை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டமும் செய்தனா். அப்போது தமிழக அரசை கடுமையாக விமா்சனம் செய்ததாகவும், 2024-இல் மக்களவைத் தோ்தலின்போது பெரியகுளம்-தேனி நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மறித்து பிரசாரம் செய்ததாகவும், மதுரை கப்பலூா் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை 31-இல் சட்டவிரோதமாக கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் போராட்டம் நடத்தியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த 5 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், ஆா்.பி. உதயகுமாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அய்யப்பராஜ் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து, முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாருக்கு எதிரான 5 வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.