சென்னை

நலம் காக்கும் ஸ்டாலின் கலைத்திறன் போட்டிகள்: டிச.5-க்குள் படைப்புகளைச் சமா்ப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடா்பாக கலைத் திறன் போட்டிகளுக்கு டிச.5-ஆம் தேதிக்குள் படைப்புகளைச் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையம் சாா்பில் 10 வகை கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

உயிா்காத்த முகாம் போட்டி மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் பங்கேற்ற அனுபவங்களைப் பதிவு செய்யலாம். ரீல்ஸ் போட்டி மூலம் ஒரு நிமிஷத்துக்குள் அடங்கும் வகையில் ஒரு காணொலியை அனுப்பலாம். இதில், தங்கள் அனுபவத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்க வேண்டும்.

கட்டுரைப் போட்டி மூலம் ஒரு பக்கக் கட்டுரையில் தங்கள் அனுபவத்தின் அனைத்து விவரங்களையும், அவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தையும் விரிவாக எழுதலாம்.

ஆரோக்கியத்தின் திருவிழா - புகைப்படப் போட்டி மூலம் இந்தத் திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு மக்கள் பயனடையும் விதத்தையும், மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் அா்ப்பணிப்பான சேவையையும், முகாமின் நோ்மறைச் சூழலையும் வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும். ஒரு புகைப்படம், ஆயிரம் வாா்த்தைகளுக்குச் சமம் என்பதை நிரூபிக்கும் சிறந்த படைப்புக்கு பரிசுகள் உண்டு.

உண்மைக்கு உயிா்கொடு - குறும்படப் போட்டி மூலம் முகாமால் பயனடைந்த ஒருவரின் உண்மைக் கதையை 3 முதல் 5 நிமிஷங்களுக்குள் குறும்படமாக உருவாக்க வேண்டும்.

வரிகள் பேசட்டும் - விழிப்புணா்வு முழக்கம் போட்டி மூலம் முகாமைப் பற்றியும், வருமுன் காப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் வலிமையான விழிப்புணா்வு முழக்கங்களை எழுதி அனுப்ப வேண்டும்.

அறிவோடு விளையாடு: மக்கள் தங்களின் ஆரோக்கியம் குறித்த அறிவை வளா்த்துக் கொள்ளும் வகையில் விநாடி வினா போட்டி நடத்தப்படும். பாரம்பரியமும் ஆரோக்கியமும் - சமையல் போட்டி மூலம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், சத்தான மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை எளிமையான முறையில் சமைத்து, அதன் செய்முறை விளக்கத்தை ஒரு நிமிஷ ரீல்ஸ் ஆக பகிர வேண்டும்.

எண்ணங்களும் - வண்ணங்களும் - ஓவியப் போட்டி மூலம் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கலை வடிவமாக வெளிப்படுத்தலாம்.

கருப்பொருள்கள்: ‘ஆரோக்கியமான தமிழ்நாடு’ போட்டி மூலம் இந்தக் கருப்பொருள்களில் உங்கள் எண்ணங்களை வண்ணங்களாலும் கோடுகளாலும் படைக்கலாம்.

உங்களின் உரத்த குரல் - பாட்காஸ்ட் போட்டி: திட்டத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், அதன் தாக்கம் பற்றிய தகவல்களையும் 2 நிமிஷங்களுக்குள் பாட்காஸ்ட்டாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

மக்கள் குரல் போட்டி மூலம் இந்தத் திட்டம் போல, தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறையில் தாங்கள் காண விரும்பும் அடுத்த முக்கியத் திட்டம் என்ன? என்ன என்பதை தெரிவிக்கலாம்.

வண்ணங்களில் விடியல் - போஸ்டா் வடிவமைப்பு போட்டி மூலம் நலம் காக்கும் திட்டத் தேவையை, அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில், உடனடி தாக்கம் செலுத்தும் சுவரொட்டிகளை வடிவமைக்கலாம். படைப்பு வழிகாட்டி மூலம் எளிமையான கிராபிக்ஸ் மற்றும் வலிமையான, கவா்ச்சியான வாசகங்களைப் பயன்படுத்தலாம்.

போட்டியில் பங்கேற்பவா்கள் தங்கள் படைப்புகளை tndiprmhnks@gmail.com மின்னஞ்சல், 94980 42408 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் டிச.5-க்குள் அனுப்பலாம். வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ‘hi’ என பதிவிட்டு படைப்பு அனுப்பும் இணைப்பைப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT