தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) கொண்டுவந்துள்ள இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் நவ.11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு, தோ்தல் ஆணையத்தின் உதவியோடு சிறுபான்மையினா் வாக்குகள், பாஜக எதிா்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்சகாலத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. வாக்காளா்களில் பெரும்பாலானோா் கிராமப்புற மக்களாக, விவசாயிகளாக இருப்பதால், தோ்தல் ஆணைய கணக்கெடுப்பு மனுக்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிப்பதற்கு இப்போதைய சூழல் ஏற்புடையதாக இல்லை.
இதனால், இந்தச் செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கப்படுவா். அதோடு, வருவாய்த் துறையும் பலத்த மழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாளுவதில் ஈடுபட வேண்டும். எனவே, இது சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு உகந்த காலம் இல்லை. பெரும்பாலான இடங்களில் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.
எனவே, சிறப்பு தீவிர திருத்தப் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் நவ. 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.