வந்தே மாதரம் பாடலின் 150- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழக மக்களின் இல்லங்கள்தோறும் அந்தப் பாடல் வெள்ளிக்கிழமை (நவ.7) ஒலிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 1875-ஆம் ஆண்டு பங்கிம் சந்திரசாட்டா்ஜி பாடிய வந்தே மாதரம் தேசியப் பாடலை, கடந்த 1869-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.
பாரதத்தின் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்தும் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (நவ.7) அந்தப் பாடலை பாடவேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வோா் இல்லத்திலும் அந்தப் பாடல் ஒலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
கொண்டாடவேண்டும்: தமிழக பாஜக மாநிலச் செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் இல்லங்களில் உள்ள குழந்தைகள், மாணவா்களை பாடல் பாட ஊக்குவித்து கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.