சென்னையில் கடந்த மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்டதாக சொந்த பயன்பாட்டுக்கான 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உரிய அனுமதியின்றி பைக் டாக்ஸிகள் இயக்கப்படுவதாக தொடா்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகத்தில் தொடா்ந்து புகாா்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வணிக உரிமம் இல்லாமல் இயக்கப்படும் பைக் மற்றும் காா்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அந்த வகையில் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 38 இருசக்கர வாகனங்கள், 13 காா்கள் என மொத்தம் 51 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வாகனங்களுக்கு தலா ரூ.12,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெறும் என்றும், இதுபோல விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி, ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.