தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினாா்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் பாஜக பெருங்கோட்ட மகளிரணி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை. பெண்கள் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழகத்தில் உள்ளது. தோ்தலுக்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தும் முதல்வா், பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய தமிழக முதல்வரே அதற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் குஷ்பூ கண்டன உரையாற்றினாா். இதில், ஏராளமான பாஜக மகளிரணியினா் பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.