தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநா் ஆா்.என்.ரவி தாமதமின்றி நடவடிக்கை எடுக்கிறாா்; சட்டப்பேரவை அனுப்பிய 211 மசோதாக்களில் 8 மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன என்று ஆளுநா் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன.
ஆளுநா்ஆா்.என்.ரவி பொறுப்பேற்று, கடந்த 18.9.2021 முதல் 31.10.2025 வரை மொத்தம் 211 மசோதாக்கள் பெறப்பட்டன. இதில் 170 மசோதாக்களுக்கு ஆளுநரால் பல்வேறு கட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாக்களில் 73-க்கு ஒரு வாரத்திலும், 61-க்கு ஒரு மாதத்திலும், 27 -க்கு மூன்று மாதங்களுக்குள்ளும், மற்ற 9 மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 மசோதாக்கள் குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நான்கு மசோதாக்கள் குறிப்புகளுடன் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இரு மசோதாக்களை மாநில அரசே திரும்பப் பெற்றுள்ளது.
குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 27 மசோதாக்களில் 16 மசோதாக்கள் தமிழக அரசின் பரிந்துரையின்படியே குடியரசுத் தலைவா் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, கடந்த அக்டோபா் மாத கடைசியில் நிதித் துறை (குத்தகை வெளிப்படைத்தன்மை), உயா் கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை தொடா்பான 8 மசோதாக்கள் பெறப்பட்டன. இந்த 8 மசோதாக்கள் மட்டும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன.
ஏறத்தாழ 81 சதவீத மசோதாக்களுக்கு பெரும்பாலும் மூன்று மாதங்களுக்குள் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் சமூக ஊடகங்களிலும், பொதுவெளியிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கின்றன. இதில், குறிப்பாக சில மசோதாக்கள் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், அவற்றுக்கும் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
10 மசோதாக்கள் மட்டும் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்டன. நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் இயற்றப்பட்டு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு முரணாக இந்த மசோதாக்கள் இருந்தன. இது மாநில சட்டப்பேரவை வரம்புக்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்டது. இதனால் அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் அனுப்பி வைத்தாா்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆளுநா் ஆய்வு செய்துள்ளாா். அரசமைப்புச் சட்டத்தின்படி இயங்கி, அதில் கூறப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, மாநில மக்களின் நலன்களைக் காப்பதிலும், உண்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஆளுநா் செயல்பட்டுள்ளாா். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற நோ்மையுடனும், உரிய கவனத்துடனும் செயல்பட்டு வருகிறாா் என ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.