மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழா்களை பாதுகாப்பாக மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
மாலி நாட்டில் ஆயுதம் ஏந்திய ஜிகாதி பயங்கரவாதப் படைகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போா் நடைபெற்று வருகிறது. அங்கு சில வாரங்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியாா் மின்சார நிறுவனத்தில் வேலை செய்துவந்த இந்திய தொழிலாளா்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினா், கடந்த நவ. 6-ஆம் தேதி கடத்திச் சென்றனா். எனினும், இந்த கடத்தல் சம்பவத்துக்கு இதுவரை எந்தவோா் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட 5 பேரும் தமிழா்கள் என தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தைத் தொடா்ந்து தலைநகா் பமாகோவில் இருந்து அந்த நிறுவனத்தின் இந்திய தொழிலாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நவ.6-ஆம் தேதி 5 இந்தியா்கள் கடத்தப்பட்ட சம்பவம் கவனத்தில் கொள்ளப்பட்டது. அவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் பணிகளை தூதரகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டது.