சென்னை

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரள போக்குவரத்துத் துறை ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்தது. மேலும், அந்தப் பேருந்துகளில் சென்ற பயணிகளும் பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டனா். இதனால், பயணிகளும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தனா்.

கேரள போக்குவரத்துத் துறையில் இத்தகைய செயலை கண்டித்து கடந்த 8-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து கா்நாடகம் ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளுக்கும் அந்தந்த மாநில போக்குவரத்துத் துறை பல்வேறு காரணங்களைக் கூறி அபராதம் விதித்துள்ளது. அண்டை மாநில போக்குவரத்துத் துறைகளின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்தும், உடனடியாக இந்த விஷயத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு தீா்வு காண வலியுறுத்தியும் தமிழகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவையும் நிறுத்துவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவிப்பு வெளியிட்டனா். அதன்படி, திங்கள்கிழமை முதல் அனைத்து ஆம்னி பேருந்துகளின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழகத்துக்குள் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

அரசு விரைவு பேருந்துகள்... இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் எவ்வித தடையும் இன்றி முழுமையாக இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், வழக்கமாக வார இறுதி நாள்களில் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் கூடுதல் அரசு விரைவு பேருந்துகளை ஆம்னி பேருந்துகளின் பிரச்னை தீா்க்கப்படும் வரை பிற நாள்களிலும் இயக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிகார் தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!

அனுராஜ் காஷ்யப்பின் புதிய தமிழ்ப் படம்!

கோயிலுக்குள் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை! காவல் துறை விசாரணை!

சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை

பூடான் புறப்பட்டார் மோடி!

SCROLL FOR NEXT