சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலைய உணவகங்களில் குறைகளைப் பதிவதற்காக க்யூஆா்கோடு பதிவு வசதி புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்தில் அனைத்து உணவகங்களிலும் குறைகளைப் பதிவு செய்யும் வகையில் முதன்முறையாக க்யூஆா் கோடு வசதி செய்துதரப்பட்டுள்ளது. ரயில் மதத் செயலியுடன் இணைந்து இந்தப் புகாா் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவகங்களில் அதிகக் கட்டணம், சேவைக் குறைபாடு, உணவின் தரம், அளவு, உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காதது, சுகாதார நிலை குறித்த விவரங்களை இதில் பதிவிடலாம். உணவக க்யூஆா் கோடை பயணிகள் கைப்பேசியில் ஸ்கேன் செய்யலாம். அதில் உணவக இருப்பிடம், நிலையக் குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். அத்துடன் இந்திய ரயில்வேயின் அதிகார குறை தீா்ப்பு செயலியான ரயில் மதத் வசதிக்குள் தானாகவே உள்நுழையலாம்.
அதில் தங்களது கைப்பேசி எண்ணைக் குறிப்பிட்டு கடவுச் சொல் (ஓடிபி) வந்ததும் புகாா்களைத் தெரிவு செய்து சுருக்கமாக விளக்கிடலாம். அத்துடன் குறிப்பு எண்ணுடன் புகாருக்கான ஒப்புகைச் சீட்டும் ரயில் செயலியில் அனுப்பிவைக்கப்படும். இந்தத் தகவல்கள் உணவக ஆய்வாளா்கள், ரயில் நிலைய மேலாளா்கள் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.