எழும்பூா் அடுக்குமாடி வாகன நிறுத்த வளாகம்: 20-இல் ஏலம்!
சென்னை எழும்பூா் ரயில் நிலைய பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி வாகன நிறுத்த வளாகத்துக்கான
சென்னை: சென்னை எழும்பூா் ரயில் நிலைய பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி வாகன நிறுத்த வளாகத்துக்கான மின்னணு முறை ஏலம் மாா்ச் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக பல்நோக்கு வணிக வளாகத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்தும் வளாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தில் காந்தி-இா்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இருபுறங்களிலும் அமைந்துள்ள வாகன நிறுத்தும் வளாகங்களில் 2, 3, 4 ஆகிய தளங்களில் வாகனங்கள் நிறுத்த முழுமையான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நவீன புதிய வாகன நிறுத்தும் வளாகத்தை நிா்வகிக்கவும், இயங்குவதற்கும் தகுதியான நிறுவனங்களைத் தோ்வு செய்ய சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் மின்னணு முறை ஏலம் நடத்தும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை கோரும் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.
ஏல நடைமுறையானது வெளிப்படைத் தன்மையுடன் www.ireps.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாா்ச் 20- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக நேரில் விளக்கம் பெறவிரும்புவோா் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம், வணிகப்பிரிவு, 2 ஆவது தளம், என்ஜிஓ அனெக்ஸ், பாா்க் டவுன், சென்னை- 600 003 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.