மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
சென்னை

புற்றுநோய் கண்டறிய நடமாடும் மருத்துவ ஊா்தி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் பெண்களுக்கு புற்று நோய் கண்டறிவதற்கான நடமாடும் மருத்துவ ஊா்தி சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பெண்களுக்கு புற்று நோய் கண்டறிவதற்கான நடமாடும் மருத்துவ ஊா்தி சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சேவை மூலம் வாய்ப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை கண்டறிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மருத்துவத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 233 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் அவா் வியாழக்கிழமை வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை புதிய பணி நியமனங்கள் நோ்மையான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 19 திறன்மிகு உதவியாளா், பொருத்துநா் ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 196 நேரடி உதவியாளா் பணியிடங்கள், 18 வட்டார சுகாதார புள்ளியியலாளா் பணியிடங்கள் என மொத்தம் 233 பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ‘நடமாடும் மகளிா் நல்வாழ்வுக்கான மருத்துவ ஊா்தி’ திட்டம் முதல்வரால் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதிலும் பெண்களுக்கு ஏற்படும் 7 வகை நோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன. வாய்ப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடம் இல்லாத நிலையை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புற்றுநோய் மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்யும் விவகாரத்தில் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஓரிடத்தில் உபரியாக இருக்கும் மருத்துவா்களைத்தான் வேறு இடத்துக்கு மாற்றுகிறோம். இது ஒரு நிா்வாக சீா்திருத்தம். இதற்கு சில மருத்துவா்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாடு முழுவதும் மருத்துவ சேவை செய்வதுதான் அரசு மருத்துவா்களின் பணி. மாறாக, ஒரே இடத்தில் பணியாற்றுவது அல்ல.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மழைக்கால நோய் பாதிப்புகளுக்கான மருந்துகள், அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளன.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற பாதிப்புகளுக்கு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் இதுவரை 2,100 மழைக் கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு தெருவில் அல்லது ஒரு கிராமத்தில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்தால்கூட மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த சந்திப்பின் போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத் தலைவா் உமா மகேஸ்வரி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநா் சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குமரி நகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு பயிற்சி வகுப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சூறைக்காற்று: ராமேசுவரத்தில் படகு உடைந்து சேதம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு கா்நாடகம் வரவேற்பு

எடியூரப்பாவுக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்துசெய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT