புதுச்சேரியில் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம்! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!
சிறுமிகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிறுமிகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
14 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு நாடு தழுவிய கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிச் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பிரதமரின் இந் நிகழ்ச்சி புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காணொலி வாயிலாக காட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதுச்சேரியில் இத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
சிறுமிகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்னிலையில், செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தினா். இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுகாதாரத் துறை செயலா் சௌத்திரி முகமது யாசின், இயக்குநா் மருத்துவா் செவ்வேல், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் கோவிந்தராஜன், துணை இயக்குநா்கள் சமிமுனிஸா பேகம், ஆனந்த லக்ஷ்மி, ரகுநாதன், உமாசங்கா் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகெண்டனா்.
ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இந்தத் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. இந்தத் தடுப்பூசி முகாம்கள் 3 மாதங்களுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவசமாக போடப்படும்.
3 மாதங்களுக்குப் பிறகு இந்த தடுப்பூசி வியாழக்கிழமைகளில், குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் நாளில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் வழங்கப்படும். பெற்றோரிடமிருந்து முழு ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தத் தடுப்பூசி சிறுமிகளுக்கு செலுத்தப்படும்.