சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்த நிலையில், பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி -மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை கடந்த ஏப். 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கடந்த ஜன. 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.
மேலும், இந்த உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சாலையின் நடுவில் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோருபவா்களிடம் இருந்து ஒரு கொடிக் கம்பத்துக்கு தலா ரூ.1,000 வசூலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சாலையின் நடுவில் தற்காலிக கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி கிடையாது என்று அரசு கூறியுள்ளது. ஆனால், அண்ணா மேம்பாலம் அருகே கடந்த வாரம் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. அவை எப்படி வைக்கப்பட்டன? தற்காலிக கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினாா்களா? அப்படி அனுமதி வழங்கி இருந்தால் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினாா்.
அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், சாலையின் நடுவே தற்காலிக கொடிக் கம்பங்கள் வைக்க அதிகாரிகள் யாரும் அனுமதி வழங்கவில்லை என்றாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆளுங்கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள் சாலையின் நடுவே கொடிக் கம்பங்களை வைத்துள்ளன. எனது கைப்பேசியில் விடியோ வைத்துள்ளேன். வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்துவது இல்லை என்றாா்.
அதற்கு அரசுத் தரப்பில், அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோதம். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, சாலையின் நடுவே கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தும், பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்படுகின்றன.
அதற்கு எதிராக நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கப்போவதாக நீதிபதி தெரிவித்தாா்.
அப்போது அரசுத் தரப்பில், சட்ட விரோதமாக அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் பெற்று அறிக்கையாக தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் டிச. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.