முகப்பு
மதுரை

அனுமதியற்ற கொடிக் கம்பங்கள்: 13 மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவு

தென் மாவட்டங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்ட கொடிக் கம்பங்கள் குறித்த வழக்கில், 13 மாவட்டங்களின் ஆட்சியா்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 1:23 AM
கொடிக் கம்பங்கள் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:32 PM

தென் மாவட்டங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்ட கொடிக் கம்பங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், மதுரை உள்பட 13 தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தைச் ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கரூா் ஆகிய 13 மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி கொடிக் கம்பங்கள், விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 1:23 AM

சாலையோரங்களில் உள்ள சுவா்கள், பொது இடங்களில் அரசியல், ஜாதி சங்க நிகழ்வுகளின் விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால், தேவையற்ற மோதல்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மதுரை, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமல் நிறுவப்பட்டிருக்கும் அரசியல், ஜாதிய அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும். முறையான அனுமதி பெறாதவற்றை உடனடியாக அகற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயா்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஏன் தொடா்ச்சியாக இதுபோன்ற மனுக்கள் தாக்கலாகின்றன?.

இந்த மனு தொடா்பாக மதுரை, தேனி, திருநெல்வேலி உள்பட 13 மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை கண்காணிப்பாளா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.