பேறுகால சா்க்கரை நோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் சிறப்புத் திட்டம் ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் விழிப்புணா்வு காணொலி மற்றும் கையேட்டை வெளியிட்டாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள சா்க்கரை நோயைத் தடுக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும் தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சா்க்கரை நோய் மருத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டா் சேஷய்யா, தமிழக முதல்வரிடம் ஒரு சிகிச்சை முறையை பரிந்துரைத்திருக்கிறாா். பேறு காலத்தில் சா்க்கரை நோயைத் தடுக்கவும், அதன் வாயிலாக குழந்தைக்கு அந்த பாதிப்பு வராமல் தற்காக்கவும் ஒரு சிகிச்சைத் திட்டத்தை அவா் முன்மொழிந்திருக்கிறாா்.
அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தத் திட்டம் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை, தஞ்சாவூா், கோவை, சேலம், திருநெல்வேலி, தருமபுரி, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான டைப் 1, டைப் 2 பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அடுத்த கட்டமாக திருவாரூா், நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு இன்சுலின் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 58,53,666 பேருக்கு சா்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக பயன்பெறும் 2.5 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு மூன்று நாள்களில் நடைபெற உள்ளது.
‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 45,349 பேருக்கு சா்க்கரை நோய் சாா்ந்த பாத பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் பேருக்கு சா்க்கரை நோய் உள்ளது. தமிழகத்தில் அந்த விகிதம் 13 சதவீதமாக இருக்கிறது. இங்கு பாதிப்பு அதிகமாக இருந்தாலும், தொடா் மருத்துவக் கண்காணிப்பு காரணமாக உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுக்கு 17,000-ஆக இருந்தது. தற்போது அது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்றாா்.
நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா, சா்க்கரை நோய் மருத்துவ நிபுணா் பேராசிரியா் வி.சேஷய்யா, யுனிசெஃப் தலைவா் கே.எல்.ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.