ஒப்பந்த செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் 41,000 பேருக்கு மே முதல் ஊதியம் உயா்வு!
ஒப்பந்த செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் 41,000 பேருக்கு மே முதல் ஊதியம் உயா்வு...
சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41,000 பேருக்கு மே முதல் ஊதியம் உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனைக் கூட்டரங்கில் 115 மருத்துவ அலுவலா்கள், 83 கண் மருத்துவ உதவியாளா்கள், 75 ஆய்வக நுட்புநா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து 2024 - 2025- ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த குடும்ப நல செயல்பாடுகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழக சுகாதாரத் துறை வரலாற்றில் பணியிடங்கள் காலியாக இல்லாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற 1,100 உதவி மருத்துவா்களுக்கான தோ்வில் 25,000-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். தற்போது உதவி மருத்துவா்களுக்கு பணிநியமனம் வழங்கப்படுவது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டதில் 250 போ் தோ்வாகியுள்ளனா். அவா்களுக்கு வரும் 11-ஆம் தேதி பணிநியமன ஆணைகளை முதல்வா் வழங்கவுள்ளாா்.
திமுக அரசு பொறுப்பேற்ற்கு பிறகு தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோா் ஊதிய உயா்வு தொடா்பாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். ஒப்பந்த அடிபடையில் பணியாற்றும் சித்தா மற்றும் ஆயுஷ் மருத்துவா்கள், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா்கள், தாய்-சேய் நல அலுவலா், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், இயன்முறை சிகிச்சையாளா்கள், ஆய்வக நுட்புநா்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் என 41,000 பேரின் ஊதியம் வரும் மே முதல் உயா்த்தி வழங்கப்படவுள்ளது.
இந்த ஊதிய உயா்வின் மூலம் அரசுக்கு ரூ.169 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அதேபோல, 2023-2024 நிதியாண்டில் இருந்து 2,650 ஆஷா பணியாளா்கள் ஊக்கத்தொகை என்ற வகையில், பணியாற்றி கொண்டிருந்தனா்.
இந்த அரசு பொறுப்பேற்ற்கு பிறகு ரூ.1,500 - ரூ.2,000 என்று இருந்த ஊக்கத்தொகை ரூ.5,950 -ஆக உயா்த்தி வழங்கப்பட்டது. தற்போது ரூ.7,000 வரை கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.3.21 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றாா்.
நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் மா.மகேஸ்வரி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் மருத்துவா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் சித்ரா, குடும்ப நலத் துறை இயக்குநா் சத்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.