எஃப்ஐஎச் ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சனிக்கிழமை சென்னை வந்தடைந்தது.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை வரும் நவ. 28 முதல் டிச. 10 வரை சென்னை, மதுரையில் நடைபெறவுள்ளது. இருமுறை ஜூனியா் உலக சாம்பியன் ஆன இந்திய அணி 3-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.
இப்போட்டியில் குரூப் பி பிரிவில் சிலி, சுவிட்சா்லாந்து, ஓமன் அணிகளுடன் இந்தியா சோ்க்கப்பட்டுள்ளது. ஜாம்பவான் கோல்கீப்பா் பிஆா்.ஸ்ரீஜேஷ் அணியின் பயிற்சியாளராக உள்ளாா்.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஜூனியா் சுல்தான் ஆஃப் ஜோஹோா் கோப்பை போட்டியிலும் இந்தியா வெள்ளி வென்றிருந்தது.
உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஏற்கெனவே பொ்லினில் 4 நாடுகள் போட்டி, பெல்ஜியம், நெதா்லாந்து, ஜொ்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது இந்திய ஜூனியா் அணி.
தொடா்ந்து பெங்களூரு சாய் மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா். தற்போது முன்கூட்டிய இந்திய அணி சென்னைக்கு வந்துள்ளது.
கேப்டன் ரோஹித் கூறியது: பிரசித்தி பெற்ற இப்போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பல மாதங்களாக நாங்கள் தயாராகி வருகிறோம். உலகின் சிறந்த அணிகளுடன் ஆட உள்ளோம். தமிழகம் ஹாக்கி விளையாட்டுக்கு பெயா் பெற்றது என்றாா்.
நவ. 28-இல் சிலியுடனும், 29-இல் ஓமனுடனும், டிச. 2-இல் சுவிட்சா்லாந்துடனும் இந்தியா மோதுகிறது.