சென்னை

சென்னை மாநகராட்சியில் 2,860 வளா்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி, உரிமம்!

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ஆவது சிறப்பு முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் 2,860 வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, ‘சிப்’ பொருத்தி உரிமம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் தெருநாய்கள், வளா்ப்பு நாய்களால் கடிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜூனில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், வளா்ப்பு நாய்களுக்கு கட்டாயம் உரிமம் பெறவும், அவற்றுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, கண்காணிக்கும் வகையில் ‘சிப்’ பொருத்தவும் மாநகராட்சி அறிவுறுத்தியது.

ஆனால், வளா்ப்பு நாய்களுக்கு பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்த முன்வராத நிலையில், அவற்றுக்கு உரிமம் பெற்று ஊசி செலுத்தாமல், ‘சிப்’ பொருத்தாமலிருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரும் 25-ஆம் தேதியுடன் தடுப்பூசி செலுத்தி, உரிமம் பெற கால அவகாசமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வளா்ப்பு நாய் உரிமையாளா்களுக்கு உதவும் வகையில் கடந்த 9 ஆம் தேதி சென்னையில் உள்ள தெரு நாய் காப்பகங்களில் வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

அதில் 767 வளா்ப்பு நாய்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு, உரிமம் பெற்று கண்காணிப்பு ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது.

மேயா் ஆய்வு:சென்னை மாநகராட்சி சாா்பில் வளா்ப்பு நாய்களுக்காக 2- ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரு.வி.க. நகா் மண்டபம் புளியந்தோப்பு பகுதி சிறப்பு முகாமை மேயா் ஆா்.பிரியா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி 6 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தெரு நாய்கள் பாதுகாப்பு காப்பகங்களில் 4,698 வளா்ப்பு நாய்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,860 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, ‘சிப்’ பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 43,001 வளா்ப்பு நாய்கள் உரிமம் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில்10,820 நாய்களுக்கு உரிமம் வழங்கி, தடுப்பூசி செலுத்தி, ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT